ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் 182 பேர் பலி!

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆளும் தலிபான்களின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், ஒரு மாதத்தில் குறைந்தது 182பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் திடீர் வெள்ளத்தின் விளைவாக 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்துள்ளதாக, தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.கடந்த ஒகஸ்ட் 16 முதல் 21ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில், 63பேர் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 13 மாகாணங்களில் 8,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கிழக்கு லோகார் மாகாணத்தில், குஷி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள், அப்பகுதியின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர்.இந்த வெள்ளத்தால், விலங்குகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் மலைகளில் தஞ்சம் அடைய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று உள்ளூர் வானிலை துறை எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் ஜூலை மாதத்தில் 40 பேரும் அதற்கு முந்தைய மாதத்தில் 19 பேரும் உயிரிழந்தனர்.