பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் குழந்தை உட்பட 18 பேர் சடலமாக மீட்பு!

பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மற்றும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ் கூறினார்

டிரக்கில் இருந்தவர்கள் குளிராகவும், ஈரமாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் மற்றும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார்.டிரக் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் குழுவை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பில், பல்கேரிய பொலிஸார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவர் ஏற்கனவே மனித கடத்தல் குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் என்று மூத்த பொலிஸ்துறை அதிகாரி அட்டானாஸ் இல்கோவ் தெரிவித்தார்.

பல்கேரியாவின் தலைநகரான சோபியாவிற்கு வடகிழக்கே 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ள லோகோர்ஸ்கோ கிராமத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட டிரக், புலம்பெயர்ந்தவர்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக செர்பியாவிற்கு கடத்தப்பட்டவர்கள் என்று பொலிஸார் நம்புகின்றனர்.பல்கேரியாவில் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது.

துருக்கியில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முயற்சிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சமாளிக்க பல்கேரியா நீண்ட காலமாக போராடி வருகிறது.பல்கேரியா துருக்கியில் இருந்து நுழைய முயலும் மக்களை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது, புகலிடக் கோரிக்கையாளர்கள் அவர்கள் தடுக்கப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.