13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அதிபரின் செயலருக்கு கடிதம்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அதிபரின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் வருமாறு, "நாங்கள் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி.

கடந்த வாரம் 2ஆம் திகதி அதிபரின் செயலாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தின் படி (Ref PS/PCA/03-iii) 13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பாக எங்கள் கருத்துக்களை பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

1988 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13 ஆம் திருத்தச்சட்டம் ஏற்கனவே அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.

அதன் பின்னர் நாடு முழுவதும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன.

எனவே, அரசியலமைப்பின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ளதை செயல்படுத்துவதற்கு பார்வைகளை அழைக்க வேண்டிய அவசியமில்லை.

எவ்வாறாயினும், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் அவ்வப்போது திரும்பப் பெறப்பட்டன.

மாகாண சபைகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட நிலம், காவல்துறை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற அதிகாரங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்" - என்றுள்ளது.