கொல்லப்பட்ட 129 சிறைக்கைதிகள், 59 பேர் படுகாயம்: கலவரமான சிறைச்சாலை

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பத்தின் நிலைமை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷபானி லுகூ தெரிவிக்கையில், சிறையின் நிர்வாகக் கட்டிடம், அதன் உணவுக் கிடங்குகள் மற்றும் ஒரு வைத்தியசாலையிலும் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வன்முறையில் சுமார் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த சமபவத்தின்போது எந்தக் கைதியும் தப்பிச் செல்லவில்லை எனவும், தப்பிக்க முயன்றவர்கள் உயிரிழந்ததாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அரசு விசாரணை நடத்தி வருகின்றது.

மக்காலா சிறைச்சாலை கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிகப்பெரியது மற்றும் 1,500 கைதிகளை தடுத்து வைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டதாகும்.

இருப்பினும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, தற்போது 14,000 முதல் 15,000 கைதிகள் அங்கு உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் விசாரணைக்காக காத்திருக்கும் நபர்கள் என்று அங்குள்ள சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டுகிறது.