யாழில் உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்தக் குழுக்கள்!


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் இன்று (17) ஆரம்பமான நிலையில் நேற்று வரை (16) மேற்குறிப்பிட்டளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 7 கட்டுப்பணமும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு 8 கட்டுப்பணமும், பருத்தித்துறை நகர சபைக்கு 8 கட்டுப்பணமும், சாவகச்சேரி நகர சபைக்கு 8 கட்டுப்பணமும், காரைநகர் பிரதேச சபைக்கு 8 கட்டுப்பணமும், ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு 5 கட்டுப்பணமும், நெடுந்தீவு பிரதேச சபைக்கு 5 கட்டுப்பணமும், வேலணை பிரதேச சபைக்கு 7 கட்டுப்பணமும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு 7கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டி

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு 7 கட்டுப்பணமும், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு 7 கட்டுப்பணமும், வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு 8 கட்டுப்பணமும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு 8 கட்டுப்பணமும், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கு 8 கட்டுப்பணமும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு 9 கட்டுப்பணமும், சாவகச்சேரி பிரதேச சபைக்கு 7 கட்டுப்பணமும், நல்லூர் பிரதேச சபைக்கு 6 கட்டுப்பணமும் என மொத்தமாக 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அகில  இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC), இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) , தேசிய மக்கள் சக்தி (NPP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டி

தமிழ் மக்கள் கூட்டணி இதுவரை 14 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியதுடன் வல்வெட்டித்துறை பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, ஊர்காவற்துறை பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எட்டு உள்ளூராட்சி சபைகளிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் காரைநகர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.