ரஷ்யா உக்ரேன் இடையேயான போர் சில காலமாகச் சற்றே ஓய்ந்திருந்த நிலையில், திடீரென நேற்றைய தினம் உக்ரேன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
எனர்ஜி உட்கட்டமைப்பைக் குறிவைத்து அதிநவீன தொழில்நுட்பம் மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரேன் நாட்டில் உள்ள அணைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்குதல் நடத்த அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதை ரஷ்யா உறுதி செய்துள்ளது.
சுமார் 10 இடங்களைக் குறிவைத்து 100 ஏவுகணைகள், 100 டிரோன்கள் மூலம் ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அங்கே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரேன் தரப்பும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளது. ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடந்ததாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இந்தத் தாக்குதல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், ரஷ்யத் தாக்குதல்களை வீழ்த்த உதவுமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக ஜெலன்சி கூறுகையில்,
ஐரோப்பிய நாடுகள் எங்களுடன் இணைந்து செயல்பட்டால் அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
மத்திய கிழக்கில் இந்த ஒற்றுமை இருக்கிறது. ஐரோப்பாவிலும் அதே ஒற்றுமை இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் உள்ள உயிரின் மதிப்பு ஒன்று தான். ரஷ்யா எல்லைக்குள் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்த மேற்குலக நாடுகள் எங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் ரஷ்யாவின் இந்த அத்துமீறலைத் தடுக்க உதவ வேண்டும்" என்றார்.
இந்த மோசமான தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முக்கிய உட்கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.