6 பிக்குகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு : மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு : இலங்கையை புரட்டிப் போட்ட சம்பவங்கள்

நாட்டில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நடந்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.


அனுராதபுரத்திலிருந்து குருணாகலை நோக்கிச் சென்ற லொறியும், குருணாகலையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் இன்று (25) அதிகாலை தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த வேனில் பயணித்த ஏனைய மூன்று பேரின் நிலை மோசமாக இருந்ததால், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வேன் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்று தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் வேன் சாரதி உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தை தொடர்ந்து புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக இன்று முற்பகல் உறவினர்கள் ஒன்று கூடியுள்ளதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக தற்போது உறவினர்கள் ஒன்று கூடியுள்ள நிலையில் ஆடைத்தொழிற்சாலை பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலையின் முன்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.


இதேநேரம் மெல்சிரிபுர - பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் 7 பிக்குகள் உயிரிழந்துள்ளதோடு படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று (24) இரவு 9.00 மணியளவில், புனித தலத்தில் மத சடங்குகளை முடித்துவிட்டு தியான மண்டபத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்தபோது கேபிள் காரில் 13 பிக்குகள் பயணித்துள்ள நிலையில், அதில் ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.

அவர்களில் மூவர் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு பிக்குகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது கேபிள் காரில் இருந்து குதித்த இரண்டு பிக்குகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

மலை உச்சிக்கு பிக்குகளை ஏற்றிச் சென்ற கேபிள் காரின் கம்பி அறுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பன்சியகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.