கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்


கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் நேற்று (4) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அம்மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் உள்ளிட்ட 13 இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாக றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கனேடிய காவல்துறை தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. 31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

"சந்தேக நபர்கள் கறுப்பு நிற நிசான் ரோக் [வாகனத்தில்] இருக்கலாம்," என்று றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) அதிகாரி சஸ்காட்செவன் கூறினார், ஆண்களையோ அல்லது காரையோ பார்க்கும் எவரும் அவர்களில் இருந்து விலகி இருக்குமாறும் காவல்துறையை அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.  

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சஸ்காட்சுவானில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் நடத்தப்பட்ட தாக்குதல்களை "பயங்கரமான மற்றும் இதயத்தை உடைக்கும்" செயல் என்று விபரித்தார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்தவர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். "நேசிப்பவரை இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன்," என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ, சஸ்காட்சுவான் குடியிருப்பாளர்களை " அவர்களது இடத்தில் தங்குமாறு" வலியுறுத்தினார்.

"சஸ்காட்செவனில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதிக்கு அருகாமையில் உள்ளவர்கள், தயவுசெய்து தமது இடத்தில் தங்கி பாதுகாப்பாக இருங்கள்" என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதியான ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனின் (JSCN) பழங்குடி சமூகத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது 

இதேவேளை காயமடைந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அறிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் பலர் தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.

காயமடைந்தவர்கள் தொடர்பு கொண்டால் சம்பவத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற முழுமையான விபரத்தை பெறமுடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.