'30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்கின்றோம்.." : பகிரங்கமாக பரபரப்பு தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்



 இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு வழங்கி வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக பாகிஸ்தான் செய்துவந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடா்ந்து, எல்லைகள் மூடல், அந்நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடா்பான காணொலிகள் மற்றும் புகைப்படங்களை பாதுகாப்புப் படையினா் ஆராய்ந்த போது, பயங்கரவாதிகளின் கைகளில் அமெரிக்க தயாரிப்பு அதிநவீன இயந்திர துப்பாக்கிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில்,  பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
 
“இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு வழங்கி வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்காக, அந் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் ஒரு பகுதியாகவே பாகிஸ்தான் மேற்கொண்டு வந்துள்ளது. இது பாகிஸ்தான் செய்த தவறுதான்.

இதனால், பாகிஸ்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான போரிலும், 2001-ஆம் ஆண்டு செப்டம்பா் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத்ததுக்கு எதிரான போரிலும் பாகிஸ்தான் பங்கேற்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு பாகிஸ்தானின் நிலை கேள்விக்குள்ளாகாமல் இருந்திருக்கும்.

இதற்காக, எங்கள் நாட்டைத் தவிர வேறு யாரையும் குறை சொல்லவும் முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளித்து வருவது குறித்து ஐ.நா. சபை உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் இந்தியா நீண்ட காலமாக தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

பாகிஸ்தான் தரப்பில் இதற்கு மறுப்பும், எதிா்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை அந் நாட்டு அரசின் சிரேஷ்ட அமைச்சா் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருப்பது, உலக நாடுகளை மிகுந்த கவலைக்கும், அதிரிச்சிக்கும் உள்ளாக்கியிருப்பதோடு, பாகிஸ்தான் மீதான இந்தியாவின் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.