'குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டிருக்கலாம்..: : நீலநிறப்பை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்



செம்மணியில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் 1995 - 1996 களில் யாழ்ப்பாணத்தில் குடும்பம் குடும்பமாகக் காணாமல்போனோரின் மனித எச்சங்களாக இருக்கக்கூடுமோ? என்ற சந்தேகம் எழுவதாகத் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேநேரம் செம்மணி மனிதப்புதைகுழியில் கண்டறியப்பட்ட நீலநிறப்பை யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

செம்மணி சித்துபாத்தியில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் நான்காவது நாளாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்று முன்தினம் மதியம் வரையான காலப்பகுதியில் 33 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்தோடு இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் நீலநிறப்பை ஒன்றும், துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன்,

செம்மணி மனிதப்புதைகுழியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சிறிய பிள்ளை ஒன்றின் எலும்புக்கூடும், அதனருகில் யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்ட புத்தகப்பை ஒன்றும் அடையாளங்காணப்பட்டிருந்தது.

 அங்கு கண்டறியப்பட்ட நீலநிறப்பை யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இருந்தபோதிலும், அக்காலப்பகுதியில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த நீலநிறப்பை யுனிசெப் அமைப்பினால் எப்போது, எதற்காக வழங்கப்பட்டது என்று நன்றாகத் தெரியும்  

'1995 - 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல்போயினர். தற்போது செம்மணியில் கண்டறியப்படும் எலும்புக்கூடுகளைப் பார்க்கையில், அவை அக்காலப்பகுதியில் குடும்பம் குடும்பமாகக் காணாமல்போனவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கக்கூடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது'
 அக்காலப்பகுதியில் காணாமல்போன குடும்பங்கள் மற்றும் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் மனித எச்சங்கள் தொடர்பில் முறையான பரந்துபட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்  

அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இம்மனிதப்புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு தாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்களிடம் கோரியிருந்தோம்.

 இவ்விடயம் தொடர்பில் உண்மை கண்டறியப்படுவதை முன்னிறுத்தித் தாம் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிப்போம் என்றும் உறுதியாகக் கூறினார்.