'உடனடியாக வெளியேறுங்கள்.." : தையிட்டி விகாரதிபதிக்கு பறந்த கடிதம்



யாழ்ப்பாணம்- தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

தையிட்டியில் உள்ள காணி உரிமையாளர் ஒருவர் தவிசாளருக்கு முறைப்பாடு அளித்துள்ள நிலையிலேயே அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் , ”முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில், தங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்பட்டால், அவற்றுக்கான ஆவணங்களை பிரதேச சபையில் சமர்ப்பிக்கவும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அக்காணியில் இருந்து வெளியேற வேண்டும்.

தவறின் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.