திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுசிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை, ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன், அங்கு பெரும்குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது.
இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள்.
இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்களை ஏற்றுவதற்காக முச்சக்கரவண்டி வந்தபோது, அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர், இங்கே வாகனங்கள் உள்நுழைய முடியாது எனவும் நேரம் முடிந்து விட்டதால் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அங்கு சத்தம் போட்டு அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பக்ததர்கள் உட்பட பூசகர்கள் தங்களுக்குரிய பூசைப் பொருட்களையும் அன்தான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறினார்கள்.
ஆடி அமாவாசை தீர்த்தத்திற்காக தொல்லியல் திணைக்களத்திடம் முற்பகல் 11மணிவரை அனுமதி பெற்றிருந்த நிலையில், சம்பந்தம் இல்லாத பௌத்த பிக்கு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறந்த ஆத்மாக்களுக்கான கடனை தீர்க்கும் புனிதமான நிகழ்வில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர்.