இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்து வந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் டேர்க் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தின்கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முதன்மைபொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை குறித்த அறிக்கையிலேயே இதனை வலியுறுத்தியுள்ள அவர் அதில்மேலும் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரின்போது மீறல்கள் துஸ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களிற்கு அரசபடையினரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகள்போன்ற அரச சாரா தரப்பினரும் காரணம் என்பதை தெளிவாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலுடன் இதன் ஊடாக பொறுப்பு கூறலை ஆரம்பிக்கவேண்டும்.
இலங்கைக்கான எனது விஜயத்தின் போதுபாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துன்பத்தை நான் தெளிவாக பார்த்தேன்.
உண்மைமற்றும் நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் . தேசிய ஐக்கியம் பற்றிய அரசாங்கத்தின் நோக்கினை சõத்தியமாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள்அவசியமானவை.
அனைத்திற்கும் அப்பால் கடந்தகால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் அவசியம் சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்கின்றேன். பாரியமனித உரிமைமீறல்கள் சர்வதேச சட்ட மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கு அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
வடக்கு,கிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். நீண்டகால பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளை விடுதலை செய்யவேண்டும்.
இலங்கைக்கு வெளியேயும் உள்ளேயும் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் மற்றும்நல்லிணக்க முயற்சிகளிற்கு சர்வதேச சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும்.
சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்கு தொடுப்பதற்கான முக்கிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குரியது என்றாலும் இதனை சர்வதேச வழிமுறைகளால் ஆதரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.