'சூத்திரிதாரியை கூறிவிட்டேன்.. அந்த சூத்திரதாரியை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது.." ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை  அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் என அனைவரும் அறிவர். அதனை நான் குற்றப்புலனாய்வுப்பிரிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர்,


இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாகவே எனது நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டு எனது அரசாங்கம் கலைக்கப்பட்டு கட்சியும் சீரழிக்கப்பட்டது.
 
இது எவ்வாறு இடம்பெற்றது என்பதை நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் யாராலும் அதனை வெளியில் கூற முடியாத நிலைமையே காணப்படுகிறது.
 
தற்போது பிரதான சூத்திரதாரியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
 
ஆனால் அவர்கள் அனைவரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள்.
 
சகல அரசாங்கங்களும், இராணுவத்தினரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிவார்கள். சூத்திதாரி எங்கிருக்கின்றார் எனக் கூறினாலும், எம்மால் அவர்களுடன் மோத முடியாது.

சில சக்திவாய்ந்த உலகத் தலைவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர்.
 
அவர்களால் போர் இல்லாமல் வாழ முடியாது. அவர்களுக்கு போர் மனநிலை மாத்திரமே இருக்கிறது.
 
உதாரணமாக, நெதன்யாகுவைக் குறிப்பிடலாம். அவர் எப்போதும் யாரையாவது தாக்க முயற்சித்துக் கொண்டே இருப்பார்.
போருக்குச் செலவிடப்பட்ட பணம் அனைத்தும் உலகின் ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும்.
 
25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் சென்றபோது, தெருக்களில் யாசகர்களைப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது, அவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். இந்தப் போர் மனநிலைதான் இதற்கு வழிவகுத்தது என்றார்.