பொய் கூறுவதனை நிறுத்த வேண்டும். இதுதான் ஜனாதிபதி அநு ரகுமாராவிடம் முதலில் ஏற்பட வேண்டிய "மாற்றம்'. துறைமுகத்தில் 400 உப்பு கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த 400 கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் மாத்திரமே; விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் யாருடையவை என்ற பெயர் பட்டியலை ஜனாதிபதி முடியுமானால் வெளிப்படுத்தட்டும் பார்க்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் சவால் விடுத்தார்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைதொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
மாற்றம் என்ற கவஷத்தை முன்வைத்தே அநுரகுமார ஆட்சி பீடம் ஏறினார் . ஆனால் ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள், அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்த கருத்துக்களுக்கு முற்றிலும் மாற்றமாகவுள்ளது.
எனவே அவரிடம் ஏற்பட வேண்டிய மாற்றம், பொய்சொல்வதை நிறுத்தி உண்மை பேச வேண்டும். ஏனெனில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது உண்மைகளை பேசி வந்த ஜனாதிபதி தற்போது அதிகமாக பொய்கிளியே பேசுகின்றார்.
சுங்கத்தில் இருந்து 309 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்த விடயத்தை ஜனாதிபதி ஒரு பொருட்டாகவே கருதவில்லை .
309 கொள்கலன்களில் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 150 கொள்கலன்களை ஏன் விடுவித்தார்கள் என்று கேட்டால் . இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார் . இதற்கு முன்னர் இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றதால்தான் மாற்றம் வேண்டுமென மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள்.
மாறாக கடந்த கால அரசாங்கங்கள் செய்த அதே செயலை செய்வதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வில்லை. துறைமுகத்தில் 400 உப்பு கொள்கலன்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. உப்பு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட திகதிக்கு பின்னர் கொள்கலன்களில் ஏற்றப்பட்டவை என கருதியே இந்த கொள்கலன்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால்அந்த 400 கொள்கலன்களில் 6 கொள்கலன்கள் விடுக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் யாருடையவை என்ற பெயர் பட்டியலை முடியுமானால் ஜனாதிபதி வெளிப்படுத்தட்டும் பார்க்கலாம்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியைவிட பல மடங்கு மோசடி இடம்பெற்ற வி.எப்.எஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் உறுதியளித்தது. ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் அதுதொடர்பில் எந்தவிசாரணையும் மேற்கொள்ளவில்லை.
முடியுமானால் வி.எப்.எஸ் கொடுக்கல் வாங்கலை மோசடியை கண்டுபிடித்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறேன். வெளிப்படைத் தன்மையும் ஆட்சி செய்வதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது வெளிப்படை தன்மையை கைவிட்டுள்ளது என்றார்.