‘ராக் வித் ராஜா’- மகன்களுக்காக தனுஷ் பாடிய பாடல்!

இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ இசை நிகழ்ச்சி மார்ச் 18 சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டு இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மேடை ஏறிய தனுஷ், ‘நிலா அது வானத்துமேலே’ பாடலை தனது மகன்களுக்காக பாடல்வரிகளை மாற்றி ”கண் மூடி தூங்கிடு பூவிழி மானே’ என தாலாட்டு பாடலாக பாடினார்.அதனை அவரது மகன்கள் இருவரும் நெகிழ்ச்சியுடன் கேட்டு ரசித்தனர். தனுஷ் பாடி முடித்ததும் இளையராஜா கைதட்டி பாராட்டினார். இந்த நிகழ்வை வீடியோவாக தனுஷ் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.நாயகன் படத்தில் தாலாட்டு பாடலாக வரும் தென்பாண்டி சீமையிலே பாடலுக்கு இளையராஜா முதலில் நிலா அது வானத்துமேலே டியூனைதான் இயக்குநர் மணிரத்னத்திடம் இசைத்து காட்டியிருக்கிறார்.ஆனால் மணிரத்னம் அந்த டியூனை நடனமாடும் வகையில் மாற்றி தருமாறு கேட்டு நிலா அது வானத்து மேலே பாடலாக படத்தில் பயன்படுத்திக்கொண்டார். இதனை பல்வேறு தருணங்களில் இளையராஜா ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.