'பழிச்சொல்லுக்கு ஆழாக நாம் தயாரில்லை' - சூசகமாக தெரிவித்த சம்பந்தன்


“கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது விட்டவர்கள் நாம் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தயாரில்லை” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுவாரத்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “ அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக எம்மை அழைத்துள்ளார்.

நாம் அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு அதில் பங்கேற்கவுள்ளோம். அத்துடன் அச்செயற்பாடு முன்னகர்த்தப்படுவதற்கான அனைத்துவிதமான பங்களிப்பினையும் நாம் செய்வோம்.

எம்மைப்பொறுத்தவரையில் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற வேண்டும் என்பதே இலக்காகும்” - எனக் கூறியுள்ளார்.