'சிறப்பு முகாம் என்பது மரண கொட்டகை' : மூவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது என சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதேஅவர் இதனை தெரிவித்தார்.

 சாந்தனுடன் விடுவிக்கப்பட்ட மற்றைய மூவரும் இலங்கைக்கு வருவதற்கு அச்சப்பட்டு தாங்கள் விரும்புகின்ற நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளனர். உண்மையில் தற்போதுள்ள சிறப்பு முகாமில் அவர்களும் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டால் அவர்களுக்கும் பெரிய ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.

ஆகையினால் அவர்களை அங்கிருந்து வெளியில் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

குறிப்பாக தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கும் அரசியல் கட்சிகளை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். அங்கு இந்த மூவர் மட்டுமல்லாது ஈழத்தைச் சேர்ந்த பலர் இருக்கின்றபோது இந்தச் சிறப்பு முகாமை பார்வையிட்டு இலங்கை - இந்திய அரசுகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.

அங்குள்ளவர்களின் விடுதலைக்கு உண்மையிலேயே முயற்சி எடுங்கள். இனியும் நீங்கள் அமைதியாக இருக்கக்கூடாது. உங்களால் இதனைச் செய்ய முடியும். அந்த முயற்சி திருவினையாக்கும்.

சிறையை விடக் கொடுமையானது அந்தச் சிறப்பு முகாம். அந்தச் சிறப்பு முகாம் மரண கொட்டகை போல்தான் உள்ளது. எனவே, அங்குள்ள மூவரையும் காப்பாற்ற நீங்கள் அங்கு வாருங்கள் பேசுங்கள்.

அங்குள்ள சிறப்பு முகாம் எந்தளவுக்கு ஆபத்தானதோ அதேபோல்தான் அங்குள்ள அகதி முகாம்களும் ஆட்டு, மாட்டு கொட்டில்களைவிட மிக மோசமாக இருக்கும்.

இதேவேளை, இந்திய மத்திய அரசோ,தமிழக அரசோ நினைத்திருந்தால் சாந்தனின் இறுதி ஆசையை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால், அது நடைபெறாமல் போனதற்கும் சாந்தனின் உயிரிழப்புக்கும் தி.மு.க. அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. இதற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்தும் ஆராய்கின்றோம் என்றார்.