இரு தினங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதான பிள்ளையானுக்கு கூட 72 மணி நேர தடுப்பு கட்டளையே பிறப்பிக்கப்படுள்ளது.
ஆனால் பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கரை ஒட்டிய முஸ்லிம் இளைஞனுக்கு 90 நாட்கள் ஏன் தடுத்துவைக்கப்பட வேண்டும்? என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,.
“சபை முதல்வரே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கரை ஒட்டிய இளைஞனை பொலிஸார் கைது செய்திருந்தார்கள்.
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கரை காட்சிப்படுத்தியதற்காக 90 நாட்கள் அவரை தடுத்து வைக்க உத்தரவிட்டீர்கள்.
நாங்கள் இதனை எதிர்த்து போராடினோம். இஸ்ரேலை எதற்காக இவ்வளவு தூரம் ஆதரிக்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி பாலஸ்தீன தூதரகத்திற்கு சென்று தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஆனால் இப்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடுகிறீர்கள்
அப்படியென்றால் இதற்குள் மொசாட் அமைப்பு உள்ளதா என்பது குறித்து எமக்கு சந்தேகம் எழுகிறது.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அவர் பயங்கரவாத பிரிவுக்கு வருகைதந்து கையொப்பமிடவேண்டும் என கூறியுள்ளீர்கள்.
குற்றமில்லாது விடுவிக்கப்பட்ட ஒருவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
இரு தினங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதான பிள்ளையானுக்கு கூட 72 மணி நேர தடுப்பு கட்டளையே பிறப்பிக்கப்படுள்ளது.
ஆனால் இந்த இளைஞன் 90 நாட்கள் ஏன் தடுத்துவைக்கப்பட வேண்டும்? இது தொடர்பில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அந்த இளைஞனின் பெற்றோரை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரித்துள்ளீர்கள். மனித உரிமை ஆணையத்துக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளீர்கள்.
இது உங்களுக்கு தெரியவில்லை என்றால் அந்த பெற்றோரை அழைத்து வந்து இந்த விடயங்களை என்னால் பகிரங்கப்படுத்த முடியும்
அதனை விடுத்து 30 வருடங்களுக்கும் அதிக காலம் மௌனமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது தேர்தல் பிரசாரத்துக்காகவே பட்டலந்த சித்தரவதை முகாம் விசாரணை அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் குப்பை மேட்டை கிளறி இருக்கிறது. இதன் மூலம் பல விடயங்கள் வெளியில் வருமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.