செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்சாரக் கட்டணம் சரிசெய்யப்படாவிட்டால், இலங்கை மின்சார சபையின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வரி செலுத்துவோர் மீது மேலும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கடன் சுமை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபை இவ்வாறு செயல்பட்டால், எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படுமென எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மக்களின் கவலைகளை அதிகரித்துள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மின்சாரக் கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்ட போதும், தற்போது 20 வீதமே குறைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் கட்டணத்தை அதிக ரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும் எதிர்வரும் ஜூலை மாதம்மின்சாரக் கட்டணங்களை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ள போதும், அவற்றுக்கு இன்னும் அனுமதிவழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், செலவுகளை உள்ளடக்கிய மின்சாரக் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லையெனவும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
15 பில்லியனுக்கு உட்பட்ட தொகையில் இலங்கை மின்சார சபை நட்டத்தை எதிர்கொண்டால் மின் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.