”எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன.
மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இருநாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கடந்த 4 நாட்களாக எல்லையில் அத்துமீறி போரில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் இராணுவத்தை இந்தியப் படை விரட்டியடித்து வருகிறது.
தொடர்ந்து போர் மற்றும் காஷ்மீரின் நிலைமை குறித்து மத்திய அமைச்சரவை இந்திய இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ”எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “எங்களது படைகளை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். ஏனெனில் அது இப்போதைக்கு விரைவான நடவடிக்கையாக உள்ளது.
எனவே, இந்தச் சூழ்நிலையில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். அதன்காரணமாகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாகிஸ்தான் இராணுவம் அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவர்களுடைய தாக்குதல் உடனடியாக நிகழும். ஆகையால், பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. எங்களது நாட்டுக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே, நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.