'கொலை செய்ய போகின்றேன்.." : தாயிடம் கூறியிருந்த செவ்வந்தி



கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அவர் நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடிய அனைத்து கடல் வழிகள் மற்றும் விமான நிலைய வழிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா , கடுவெல பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொலைக்குத் தேவையான துப்பாக்கியை, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில், சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரருக்கும் இந்தக் கொலை குறித்துத் தெரியும் எனவும், அதற்கு முன்னர் அவர்கள் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக, சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரரை குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று இரவு கைது செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபரான இஷார செவ்வந்தி, ஹெரோயின் போதைபொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சந்தேக நபரின் காதுகளைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டி, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.

நேற்றைய(24) நீதிமன்ற அமர்வின் போது, தனது கட்சிக்காரருக்கு குறித்த காது சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


குறித்த நோய் நிலைமை பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்படவில்லை என்றும் சந்தேக நபரின் பேரில் ஆஜரான சட்டத்தரணி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடைமுறைப்படுத்தலிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முறையான பொலிஸ் வழிகள் மூலம் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சட்டத்தரணி, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை கைது செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை இனங்கண்டு, அவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.