நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படாத 'ஹரக் கட்டா' : நீதிமன்றம் விடுத்த உத்தரவு


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கட்டா' உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை "ஸ்கைப்" தொழில்நுட்பத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பிரதிவாதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமென கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

நீதிமன்றத்தின் முன் விடயதானங்களை முன்வைத்த அரச சட்டத்தரணி, பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என்று குறிப்பிட்டார்.

எனவே, "ஸ்கைப்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறித்த வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக மார்ச் 17 ஆம் திகதி எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதேநேரம் கம்பஹா, மஹேன பகுதியில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுத தொகையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

அதன்படி, டி56 துப்பாக்கி ஒன்றும் மெகசின் ஒன்றும் இயங்கக்கூடிய 23 இரவைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று காலை மினுவங்கொடை பத்தடுவன சந்தியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற அதிகாரிகளுக்கு, கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன