'உறுதி செய் - உறுதி செய்.. மலையக மக்களின் அடையாளத்தை உறுதி செய்.." எழுச்சியுடன் நிறைவுற்றது பேரணி

 

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று மிகவும் எழுச்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

நாலந்தாவிலிருந்து புறப்பட்டு மாத்தளையை சென்றடைந்த நடைபவணியின் இறுதி நிகழ்வுகள் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது குறித்த நடைபவணியின் கோரிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னாரில் உள்ள புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானது.

அன்றைய தினம் மலையகம் 200இன் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபிக்கு மக்கள் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து அடுத்த நாள் 29ஆம் திகதி தலைமன்னார் தேவாலய வளாகத்திலிருந்து குறித்த நடைபயணம் ஆரம்பமானது

இன்றைய இறுதிநாள் பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பெற்றோர் தொழிலுக்கு அணியும் உடையை போன்று அணிந்து தமது உரிமைக்குரலை வெளிப்படுத்தியிருந்தனர்

இதேவேளை மலையகத்தின் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்வுகளுடன் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டதோடு உரிமைக் குரலுக்கான பாடல்களும் பாடப்பட்டன.