'பஸ் கட்டணங்கள் உயரும்.." : கெமுனு விஜேரத்ன அதிரடி அறிவிப்பு


சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் குறிப்பிடத்தக்களவில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை என இலங்கை தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில்  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போக்குவரத்து அமைச்சருடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது ஜூலை மாதம் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என அமைச்சரிடம் உத்தியோகப்பூர்வமாக தெரிவித்திருந்தோம்.

தனியார் பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படும். எனினும் பேருந்து இறக்குமதிக்கு அரசாங்கத்தால் வட் வரி விதிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறோம். இதனால் பேருந்து கொள்வனவுக்கான விலை அதிகரிப்புக்கு நிகராக பேருந்து உதிரி பாகங்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன.
 
ஆகையால் 12 பிரதான காரணங்களின் அடிப்படையில் வருடாந்த பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போதும் 3 ரூபா நட்டத்துடன் பேருந்து சேவைகள் செயற்படுத்தப்படுகின்றன என்றார்.

இதேநேரம் உலக சந்தையில் பாரியளவில் எரிபொருள் விலைகள் குறைவடைந்துள்ள போதிலும், இங்கு 10 ரூபாய் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,


 நடைமுறையிலுள்ள விலை சூத்திரத்துக்கமைய விலைகள் குறைக்கப்படவில்லை. எரிபொருள் விலை திருத்தத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. பெற்றோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், வறுமை நிலையிலுள்ள பெருந்தோட்ட மக்கள் போன்றோர் அதிகளவில் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலைகள் குறைக்கப்படவில்லை என்றார்.

இதேநேரம் எரிபொருள் விலைகள் குறைந்திருந்தாலும், முச்சக்கரவண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.