'இருமும்போது ரத்தம் வெளிப்படுகிறது.." ரஷ்யாவில் பரவி வருகிறதா மர்ம வைரஸ்?.. மறுக்கும் புடின் அரசு!


 

ரஷ்யாவில் மர்மமான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.


ரஷ்யாவில், கடந்த சில நாட்களாக மர்ம வைரஸ் ஒன்று அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், அதீத உடல் வெப்பத்துடன் மக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. கூடவே இருமலும் வருகிறது. இருமும்போது ரத்தம் வெளியாகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு 39 டிகிரி வெப்பத்தில் காய்ச்சல் வருகிறது. இருமும்போது ரத்தம் வெளிப்படுகிறது. மேலும், கடுமையான சுவாச அறிகுறிகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 29ஆம் திகதி டெலிகிராமில் வெளியான பதிவு ஒன்றில், அலெக்ஸான்டிரா என்ற பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருப்பதாக அவரின் படத்துடன் கூறப்பட்டது.
இதை சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
அந்தப் பதிவில் மேலும், ரஷ்யாவில் மர்மமான வைரஸ் பரவுகிறது. இது பாதிக்கப்பட்டவுடன் அதிக வெப்பத்துடன் காய்ச்சல், 2 வாரங்களுக்கு தொடர் இருமல், இருமினால் ரத்தம் வருவது என்று மோசமான அறிகுறிகள் உள்ளன. இந்த வைரஸ் பாதித்த பெரும்பாலானோருக்கு இதே அறிகுறிகள்தான் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சாதாரண உடல் சோர்வுபோல இருந்தாலும் நாளடைவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. படுக்கையில் இருந்து எழுந்திருக்கவே முடியாது" எனவும்  அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், ரஷ்ய நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
"பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்ததில் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. அதனால் இதை அடையாளம் தெரியாத மர்ம வைரஸ் என்று சொல்ல முடியாது.

ரஷ்யாவில் புதிய அல்லது மர்மமான வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது, பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளால் பரவுகிறது. இப்போதைக்கு, நிலைமை கட்டுபாட்டுக்குள் இருக்கிறது. இதுகுறித்து யாரும் அச்சமடையத் தேவையில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.