'முதுகில் குத்தும் செயல்' தக்க பதிலடி வழங்கப்படும் - புடின் சூளுரை

வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வாக்னர் ஆயுதக் குழுவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில் அவர், "நாம் இப்போது ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்த ஆயுதக் குழு மீது நமது நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கப் போகிறது.

மொஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், இராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். வாக்னர் வாடகை இராணுவ குழு முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளது.

ரஷ்யா நீண்ட வரலாறு கொண்ட நாடாக செழித்தோங்க வேண்டும் என்றே பாடுபடுகிறோம். இந்தச் சூழலில் தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தேசத் துரோகமாகும்.

நாட்டையும் நாட்டு மக்களையும் இதிலிருந்து காப்பாற்றுவோம். இந்த ஆயுதக் கிளர்ச்சியை தூண்டிய தலைவர் கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.

எனவே, அவரைப் பின்பற்றாமல் வாக்னர் படையினர் ரஷ்ய இராணுவத்திடம் சரணடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ரோஸ்டோவ் நகரில் 3 ரஷ்ய ஹெலிகொப்டர்களை வீழ்த்திவிட்டதாகக் கூறும் வாக்னர் ஆயுதக் குழுவினர் தற்போது வோரோனேஸ் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் வாக்னர் ஆயுதக் குழுவின் அத்தனை தகவல்களும் பொய் என்று ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ப்ரிகோஸின் மீது கிரிமினல் குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக ஆயுதப் புரட்சியைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் தூண்டுதலில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டும். வாக்னர் குழுவின் உள்ளவர்கள் அனைத்து வீரர்களுமே ரஷ்ய இராணுவத்துக்கு திரும்பலாம், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நாங்கள் உங்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம். அச்சமின்றி வாருங்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள வாக்னர் குழுவின் அதிகாரபூர்வ அலுவலக மையம் முடக்கப்பட்டுள்ளது.

கலகத்தடுப்பு காவல்துறையினர் மற்றும் தேசிய காவலர்களுடன் இரண்டு பேருந்துகள் கட்டடத்திற்கு வந்துள்ளன, சாதாரண உடையில் அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.