இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளேன் என்று கூறிய இந்திய பிரதமர், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிதாக தெரிவித்தார்.
மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இலங்கைக்கு இந்தியா இக்கட்டான காலகட்டங்களில் உதவியிருக்கிறது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் என இலங்கைக்கு இந்தியா உதவியுள்ளது.
அதேநேரம் பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்தபோது இந்தியா துணை நின்றது.
ஒரு உண்மையான அயல் நாடாக இலங்கையுடன் நின்றது பெருமையாகவுள்ளது என தெரிவித்தார்.
இங்கு உரையாற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப நமது நாட்டின் பொருளாதார செயல்முறை மற்றும் நிலையான பொருளாதார நிலைக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகின்றேன்.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சிறந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம்.
மேலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நோக்கத்திற்கும் இலங்கை பிரதேசம் பயன்படுத்தப்படாது என்ற எனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.