''உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர்.. எலும்பு கூடுகள் வளைந்து காணப்படுகின்றன.." சட்டத்தரணி முக்கிய தகவல்


செம்மணி மனிதப் புதைகுழியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்

ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையிலும் இதுவரை 100க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் மீட்கப் பட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம் எனத் தெரிவித்துள்ள அவர், ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள், புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது எனத் தெரிவித்துள்ளார்.
சிலரின் கை கால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை, அவர்கள் அதனைப் புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்த சட்டத்தரணி நிரஞ்சன், ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள்,தந்தைமார், சகோதரிகள் காணாமல் போனார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது,இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது. பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழு யாழ்ப்பாணத்திற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.