'கல்பிட்டி சென்று இந்தியா செல்வதே திட்டம், திடீரென திட்டம் மாறியதால் யாழ். செல்லுமாறு கூறினார்கள்" : துப்பாக்கிதாரி வாக்குமூலம்

 
 
 புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் சந்தேக நபர் பண ஒப்பந்தத்திற்காக இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மஹரகம, தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் கந்தனாராச்சி என்ற நபர்  பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 2014 ஆம் ஆண்டு  இலங்கை இராணுவத்தில் முகமது ஷெரிப்தீன் என்ற பெயருடன் காலாட்படை வீரராக சேர்ந்துளள்ளார். பின்னர் அவர் பெப்ரவரி 20, 2020 அன்று சமிந்து தில்ஷான் கந்தனாராச்சி என்ற பெயரில் 03 ஆவது கமாண்டோ படையில் இணைந்துள்ளார்.

அவர் ஜூன் 04, 2020 அன்று கமாண்டோ பயிற்சியின் போது இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் மே 1, 2024 அன்று பொது மன்னிப்பு பெற்று சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதன் பின்னர் இந்த சந்தேக நபர் படுவத்தே சாமரவின் ஒரு துப்பாக்கி சுடும் வீரராக சிறிது காலமாக பணியாற்றி வந்ததாகவும், கெஹல்பத்தர பத்மசிறி, சலிந்த மற்றும் அவிஷ்கா என்ற குற்றவாளிகளுடனும் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தவுடன் இருக்கும் அவிஷ்கா நமட்டா ஆகியோரிடமிருந்து கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்ல உத்தரவு பெற்றதாக தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை ஒப்பந்தத்தை ஒன்றரை கோடிக்கு பண ஒப்பந்தத்தில் செய்ய ஒப்புதல் அழித்ததாக தெரிவித்துள்ளார். இரண்டு இலட்சம் பணத்தை முற்பணமாக பெற்றதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ள துப்பாக்கிதாரி மருதானையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையிலிருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம் பின்வருமாறு அமைந்திருந்தது.

'இஷாரா' என்ற பெண் எனக்கு நீதிமன்றத்திற்குள் ஆயுதத்தைக் கொண்டு வந்து தந்தார். அவர் நீண்ட காலமாக எனக்குத் தெரிந்த ஒரு நெருங்கிய பெண்.

துப்பாக்கி தனது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் நாங்கள் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறிய காரைக் கண்டுபிடிக்க நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தார். ஆனால் கார் இல்லை.

பின்னர் ஒரு முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு நீர்கொழும்பு அருகே சென்று இருவரும் இறங்கினேம். பின்னர் நாங்கள் இருவரும்  ஆடையகத்திற்கு சென்று உடைகளை வாங்கினோம்.

பின்னர் இஷாராவால் எனக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்படி நான் தனியாக ஒரு வேனில் கல்பிட்டிக்குச் செல்ல திட்டமிட்டேன். அங்கிருந்து படகில் இந்தியா செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அந்த திட்டம் சரியாக நடக்காததால் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிடப்பட்டது.

தான் சென்ற வாகனம் வாடகை சேவை வழங்குநரிடமிருந்து எடுக்கப்பட்டது  என சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

 இதேவேளை நுகேகொட குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்பதாக பிரதான சந்தேகநபரும் அவருக்கு உதவிய பெண்ணும் மருதானையில் தங்கியிருந்த விடுதியை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த விடுதியிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு இவர்களை அழைத்துச் சென்ற காரையே பொலிஸார் மீட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முதல் நாள் குறித்த காரில் வருகை தந்த நபர் ஒருவர் பிரதான சந்தேகநபரிடம் பொதியொன்றை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதற்கிடையில், நீர்கொழும்பு, கட்டுவெல்லகம வீதி, எண் 243 ஐச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்பவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவர் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தின் பக்கங்களை வெட்டி, கணேமுல்லையில் சஞ்சீவவை கொல்ல துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரைப் பற்றிய உண்மையான தகவல்களை வழங்குபவர்களுக்கு பொலிஸ் தலைமையகம் வெகுமதி வழங்கவும் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், கொழும்பு குற்றத் தடுப்புபிரிவின் இயக்குநரை 0718591727 என்ற எண்ணில் அல்லது பிரிவின் நிலையத் தளபதியை 0718591735 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தலைமையகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்ய கொழும்பு குற்றத் தடுப்புபிரிவு உட்பட 10க்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தின் பிரேத பரிசோதனை நேற்றுகொழும்பு பொலிஸ் பிணவறையில் நடைபெற்றது. சஞ்சீவவின் மனைவியின் பெயரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, சஞ்சீவவின் தாயாரிடம் உடலை ஒப்படைக்க வாழைத்தோட்ட பொலிஸாரால் கொழும்பு தலைமை நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர்.

அதன்படி, உடலை நேற்று சஞ்சீவவின் தாயாரிடம் ஒப்படைக்கவும், பொரளை மயானத்தில் அடக்கம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.