சரத் பொன்சேகா தொடர்பில் இன்னுமொரு ரகசியத்தை கூறுகின்றேன். பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரதுங்கவை குறிவைத்து அரங்கேற்றபட்ட சம்பவத்தை முன்னெடுக்க சரத்பொன்சேகாவே இரகசிய குழுவொன்றை நியமித்தார் என ஜோசப் மைக்கல் பெரேரா எதிர்க்கட்சி பிரதம கொரடாவாக இருந்த காலத்தில் பீபீசி செய்திசேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் தெரிவித்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஊடக பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
திசைக்காட்டி அரசாங்கத்தால் மகிந்த ராஜபக்ஸவை நோக்கி குரைப்பதற்கு இவர் தூண்டப்பட்டுள்ளமையானது தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காகவா என்ற சந்தேகமும் உள்ளது.
லசந்த விக்கிரமதுங்கவின் விவகாரத்துடன் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் தான் தப்பித்துக்கொள்வதற்காக ராஜபக்ஸவையை நோக்கி குரைக்கும் பணியை பொன்சேகா பொறுப்பெற்றுள்ளாரா என்ற சந்தேகங்கள் உள்ளன.
தான் தலைமை வகித்த இராணுவத்தையே காட்டிக்கொடுத்த பொன்சேகா இப்போது மகிந்த ராஜபக்ஸவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகின்றார்.
மகிந்த ராஜபக்ஸ இறுதி நேரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு முயன்றதாக கூறியுள்ளார். அப்படியென்றால் ஏன் நீங்கள் இறுதி யுத்தத்தின் போது சீனாவுக்கு சென்றிருந்தீர்கள்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் பொன்சேகா, வெள்கைக்கொடி தொடர்பில் குறிப்பிட்ட கருத்துக்களே பிரதானமானதாக இருக்கின்றன. அப்படியென்றால் யார் இராணுவத்தை காட்டிக்கொடுத்தது. என்பதனை சிந்திக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
சிங்கத்திற்கும் மரநாய்க்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது என்பதனை பொன்சேகா புரிந்துகொள்ள வேண்டும். சிங்கத்திற்கு வயது போனாலும், நோய் ஏற்பட்டாலும் புற்களை தின்னாது. ஆனால் மரநாய் என்ற விலங்கு மாமிச உண்ணி என்று கூறினாலும் விஞ்ஞாபூர்வ அறிக்கைகளின் படி சில மரநாய்கள் மரங்களின் பட்டைகளையும் தின்னும். இதனால் அவை நாயாகும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் சிங்கம்ஒருபோதும் நாயாகாது என்பதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளைப் பறித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்தறையில் நடந்த நிகழ்வில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.