காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியுற்றது.
காஸாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில், 14 உறுப்பினர்களின் ஆதரவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
ஆனால், அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இது காஸாவில் மனிதாபிமான நெருக்கடியை மேலும் ஆழப்படுத்துவதாக உள்ளதாக ஐ.நா. மற்றும் பிற அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஐ.நா சபையில் அதிகாரம் பொருந்திய துணை அமைப்புகளில் மிகவும் முக்கியமானதாக பாதுகாப்பு கவுன்சில் காணப்படுகின்றது.
சர்வதேச நாடுகளின் பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிசெய்வதுதான் இந்தப் பாதுகாப்பு கவுன்சிலின் நோக்கமாகும்.
பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் எந்த முடிவையும் உலக நாடுகள் அனைத்தும் கட்டாயம் மதிக்க வேண்டும்.
இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
இதுதவிர 10 தற்காலிக உறுப்பினர்களும் உண்டு. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் வெற்றி பெறுவதற்கு இரண்டு கட்டங்களைத் தாண்ட வேண்டும்.
அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக குறைந்தபட்சம் 9 நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதேசமயத்தில், ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இந்த ஐந்து நாடுகளுக்கும் வாக்குரிமையுடன் சேர்த்து, வீட்டோ எனப்படும் எதிர்வாக்கு அதிகாரமும் உண்டு. ஐந்து பேரில் யார் ஒருவர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலும், அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்துவிடும்.
மற்றவர்கள் ஒப்புதல் தந்துவிட்ட நிலையில், தனக்கு உள்ள உரிமையைப் பயன்படுத்தி அதைத் தடை செய்வதே இந்த வீட்டோ அதிகாரம் ஆகும்.
இதைத்தான் தற்போது அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ரஷ்யா, உக்ரேன் போரின் இதைப் பயன்படுத்தியதால் அமெரிக்கா தற்போது இதைப் பயன்படுத்தி ரஷ்யாவைப் பழிவாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
வீட்டோ அதிகாரம் உள்ள ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் ஒரு திசையிலும், ரஷ்யாவும் சீனாவும் இன்னொரு திசையிலும் எப்போதும் இருக்கின்றன.
இதனால் பல முக்கிய விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படுவதே கிடையாது. மேலும் இந்த வீட்டோ அதிகாரத்தை அதிகமுறை பயன்படுத்திய நாடுகளில் ரஷ்யா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.