ரகர் வீரர் வசீம் தாஜுதினின் கொலையுடன் தொடர்புடைய வீடியோவில் இருப்பவர் தனது அப்பா அல்லவெனவும், குறித்த வீடியோவில் தனது அப்பாதான் இருக்கின்றார் என அம்மா கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தனது அப்பாவின் கொலைக்கும் அம்மாவுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றது என்றும் இதனால் அம்மாவை கைது செய்ய வேண்டும் என்றும் கஜ்ஜா என்ற ழைக்கப்படும் அருண விதானக மகேவின் மகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இதனைத் தெரிவித்த அவர்,
எனக்கு தற்போது 16 வயதாகும். எனது அப்பாவுக்காகவே நான் கதைக்கின்றேன்.
2012ஆம் ஆண்டில் தாஜுதின் உயிரிழக்கும் போது 120 இலக்க வழிதடத்தில் பஸ் ஒன்றிலேயே அப்பா நடத்துனராக பணியாற்றினார்.
அப்போது எனக்கு 3 வயதாகும். அப்பா உயிரிழந்த பின்னர் என்னிடம் அப்பாவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தினர்.
அப்போது வீடியோவொன்றை காட்டி அது அப்பாவா என்று விசாரணை அதிகாரிகள் கேட்டனர்.
ஆனால் அங்க அடையாளங்களின்படி அவர் எனது அப்பா அல்ல என்பதனை உறுதியாக கூறினேன். எனது அப்பா அந்த குற்றத்தை செய்யவில்லை என்பதனை சாட்சியுடன் கூற முடியும்.
அப்பா முழுமையாக சரியானவர் என்று கூற முடியாது. தவறுகள் செய்திருக்கலாம் ஆனால் அவர் எனக்கு அப்பாவே.
அப்பா இறக்கும் போது எனது அம்மா டுபாயிலேயே இருந்தார். அப்பாவின் சாரதியான சம்பத் ராமநாயக்க என்பவருடன் எனது அம்மா கள்ளத் தொடர்புகளை வைத்திருந்தார்.
அது தொடர்பில் எனக்கும் அப்பாவுக்கும் தெரியவந்த பின்னர் இருவரையும் கையோடு பிடித்தோம். பின்னர் பொய் குற்றச்சாட்டில் அப்பா கைது செய்யப்பட்டு ஐந்தரை மாதங்கள் விளக்க மறியலில் இருந்த போது காணியொன்றை விற்றுவிட்டு அம்மா டுபாய் சென்றுவிட்டார்.
அப்பா சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னர் எனது அம்மாவை தேடினார். பின்னர் டூபாயில் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அப்பா இறந்த பின்னர் அம்மா இங்கே வந்தார். அப்பா கொலை செய்யப்பட்டதன் பின்னர் அம்மாவின் வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.
அப்போது அம்மாவின் கணக்கிற்கு பெகோ சமந்த இரண்டு இலட்சம் ரூபாவை வைப்பிலிட்டிருந்தார். இதில் எனக்கு சந்தேகம் இருந்தது. இதன்படி தந்தையின் கொலைக்கும் அதற்கும் இடையே தொடர்பு இருக்கின்றது.
இதேவேளை அப்பா இறந்த பின்னர் அம்மாவிடமும் என்னிடமும் தாஜுதின் கொலையுடன் தொடர்புடைய வீடியோவை அதில் இருப் பவர் அப்பாவா என்று கேட்டனர். ஆனால் அவர் அல்ல என்பதனை நான் உறுதியாக கூறினேன். அப்போது அம்மாவும் இல்லையென்றே கூறினார்.
ஆனால் பின்னர் அந்த வீடியோவில் இருப்பது எனது அப்பா தான் என்று அம்மா கூறியுள்ளார். அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க இவ்வாறு கூறியிருக்கலாம்.
இதன்படி அம்மாவையும் சம்பத் ராமநாயக்க என்பவரையும் கைது செய்து விசாரியுங்கள் என்றுகேட்கின்றேன் என்றார்