''AI புகைப்படங்களை பகிர்ந்தால் சட்டம் பாயும்.." : செம்மணி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிச்சை

 

 சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால் குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும் சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி புதைகுழியில் காணப்படும் எலும்பு கூடுகளை வைத்து , Ai தொழிநுட்ப உதவியுடன் படங்கள் உருவாக்கப்பட்டு , அவை சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது

குற்றவியல் நடவடிக்கையாக நீதிமன்ற நடவடிக்கை ஊடாக விசாரணையில் இருப்பதனால் போலியாக உருவாக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதனால் குற்றவியல் விசாரணைக்கு தடையை ஏற்படுத்துகின்றது.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்பட்டு , வழக்கினை பிழையாக திசை மாற்றிக்கொண்டு செல்வதற்கான உத்தியாக இதனை கையாள்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது

எனவே , இவ்வாறான படங்களை உருவாக்குபவர்கள் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் ஆலோசனை நடாத்தி வருகின்றோம்.

இனி வரும் காலங்களிலும் அவ்வாறான படங்கள் உருவாக்கப்பட்டு , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு எதிராக , குற்றவியல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் எனவும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, குறித்த வழக்கு விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.