தேசபந்து தென்னகோன் மற்றும் செவ்வந்தி ஆகியோர் தலைமறைவாகியுள்ள இடம் தெரியும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அவர்களை கைது செய்யும் வழிமுறைகளை தெரியும் என்று குறிப்பிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ள இடத்தை தான் அறிவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல குறிப்பிட்டார். ஆனால் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படவில்லை. அவரே நீதிமன்றத்தில் சரணடைந்தார் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
இது முற்றிலும் பொய்யானதொரு குற்றச்சாட்டு. தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியிருந்த இடம் எனக்குத் தெரியும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை பொலீசார் நன்கு அறிவார்கள் என்றே குறிப்பிட்டிருந்தேன்.
தண்டனை சட்டக் கோவையின் 60, 61 மற்றும் 62 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் தான் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதேபோல் தலைமறைவாகியுள்ள செவ்வந்தி இருக்கும் இடம் தெரியும் என்றும் குறிப்பிடவில்லை. ஆகவே பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு பொய் உரைப்பது முறையற்றது என்றார்.