‘‘தொந்தி வயிற்றுக்காரன் வரவில்லையா..” சபையில் கொந்தளித்த சாமர வொயிஸ்


பதுளை தொந்தி வயிற்றுக்காரன் வரவில்லையா என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் கோப் குழுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த  வார்த்தை என்னை அவமதிப்பதாக அமைந்துள்ளது என்று  புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
 
 பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல்  பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய அவர்,

மார்ச் 6ஆம் திகதி கூடிய கோப் குழுவில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் இரத்திக்கல் பொதியொன்று தொடர்பான பிரச்சினை எழுந்த போது, கோப் குழுவின் உறுப்பினர் ஒருவர்  பதுளை தொப்பை   வயிற்றுக்காரன் கனவிலும் கூறவில்லையா என்று குறிப்பிட்டுள்ளார். அந்த முக்கியமான குழுவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்  இவ்வாறு  பேசுவது முறையற்றது.
 
 இது என்னை  மிகவும் அவமதிக்கும் முறையற்றதொரு  விடயமாகும். பெருத்த உடல், வயிற்றை கொண்ட ஒருவரை பாராளுமன்றம் அனுப்பியமைக்காக எனது மக்களுக்கு நன்றி கூறிக்கொள்வதுடன், இவ்வாறான உடலை கொண்டுள்ளேன் என்பதை நான் பெருமையுடன் கூறுகின்றேன்.

பதுளையில் வேறு தொந்தியுடைவர்கள் எவரும் இல்லையே. நான் மாத்திரம்தானே இருக்கின்றேன். இவ்வாறு அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம். கோப் குழுவில் எமது உறுப்பினர்கள் எவரும் இல்லை. ஆளும் கட்சியினரே இருக்கின்றனர்.
 
எப்படி அங்கே நடந்துகொள்ள வேண்டும் என்று கோப் குழு உறுப்பினர்களை அழைத்து தெளிவுப்படுத்துங்கள். எனது வயிற்றை வெட்டி அகற்ற முடியாது. அதனை குறைக்க நான் முயற்சித்தாலும் அது குறையாமைக்கு நான் என்ன செய்வது. இது கடவுள் கொடுத்தது. என்னை அவமதிக்கும்  வகையில் வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,  

நீங்கள் முன்வைத்த சிறப்புரிமையை பிரச்சினை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார்