"டயஸ்போரா - இந்தியா இல்லாது ஈழம் பற்றி பேச முடியாது" கடும் தொனியில் எச்சரிக்கை..!



"ஆயுத கலாசாரம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் போன்றோருக்கு முதலில் புனர்வாழ்வளிக்க வேண்டும்.

டயஸ்போராக்களை தவிர்த்து ஈழம் பற்றி பேச முடியாது. ஆகவே, ஆயுத கலாசாரத்தை தோற்றுவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு எதிராக உயரிய சபை ஊடாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது: இந்த நாட்டில் ஓர் இனம் நீதி, நியாயம் பற்றி பேசும்போது அந்த இனம் அடக்குமுறைக்குள் உள்ளாகுவது சர்வ சாதாரணம். வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெறுக்கும் பாணியில் நாங்கள் மீண்டும் துப்பாக்கிகளை எடுப்போம். நீங்கள் மௌனமாக இருங்கள் என்ற பலாத்காரமான முறையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அலி சப்ரி போன்ற அமைச்சர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். இன நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் கற்றுக்கொடுங்கள். வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி ஆயுத கலாசாரம் தொடர்பில் குறிப்பிட்ட கருத்தை உயரிய சபை ஊடாக வன்மையாக கண்டிக்கிறோம்.

டயஸ்போராக்கல் தமிழ் மக்களின் உரிமைகள், பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். டயஸ்போராக்களை புறக்கணித்துவிட்டு ஈழம் பற்றி பேச முடியாது. அதேபோல் இந்தியாவை புறக்கணித்துவிட்டு ஈழம் பற்றி பேச முடியாது.

தமிழர்கள் விரும்பி ஆயுதங்களை ஏந்தவில்லை. 1983ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை போன்ற தமிழர்கள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. அரசாங்கம் ஆயுதமேந்த வைத்தது என நீதிமன்றத்துக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

1985ஆம் ஆண்டு தேசியத் தலைவர் பிரபாகரன் சர்வதேசத்துக்கு வழங்கிய நேர்காணலில் நாங்கள் ஆயுதமேந்தும் கொள்கையை கொண்டிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஆயுதம் ஏந்தும் சூழலை ஏற்படுத்தியது. எமது பாதுகாப்புக்காகவும், தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்பட்டது என தெளிவாக குறிப்பிட்டார்.

ஆகவே, ஆயுதங்களை நாங்கள் விரும்பி ஏந்தவில்லை. வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியின் கருத்து : "நீங்கள் தூக்குங்கள் துப்பாக்கி' என்பது போல் உள்ளது. மீண்டும் ஒரு யுத்தத்துக்கு அவர் வழிவகுக்கிறார்.

அறவழியில் போராடிய தமிழர்களை நோக்கி முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜயவர்தன போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்டார். அறவழி போராட்டத்தை பாரிய யுத்தமாக மாற்றியமைக்க ஜே.ஆர். ஜயவர்தனவின் மருமகன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

 இந்த நாடு எதை நோக்கி செல்கிறது? தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நேர்ந்த சம்பவம் பாரதூரமானது. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது. அரசாங்கத்தின் பயங்கரவாதமாகவே இதனை கருத வேண்டும்.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்கம் பற்றி அரசாங்கம் பேசுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குதல், ஊடகங்களை அடக்குதல் ஜனநாயகமா?

தன்னை ஒரு லிபரல்வாதியாக காண்பிக்கும் அதிபர் தனது பிறிதொரு முகத்தை காண்பிக்கும் வகையில் செயற்படுகிறார். இதன் ஒரு செய்தியே தற்போது வெளிப்படுகிறது என்றார்.