''ஊழல் ஒரு தொற்றுநோய், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்குங்கள்.." ஐ.நா.வில் ஜனாதிபதி அநுர முழக்கம்


ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

இதேநேரம் பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர்,


உலகளாவிய வறுமை, ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்கள் போன்ற பல சவால்களை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

ஊழலற்ற, நீதிமிக்க ஆட்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி இலங்கை பயணிக்கின்றது.

பில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், கோடிக்கணக்கான டொலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுகின்றன.

எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதேநேரம் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போர் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

ஆயுதங்களைக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

 “நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் போரை நிராகரிக்கும் என்னுடைய கருத்துக்கு உடன்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக போரின் கசப்பான அனுபவங்களை கொண்ட நாடாக அதன் அழிவுகளை நாம் நன்கு அறிவோம்.

போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுச் சின்னங்களுக்கு வந்து, அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவிகள் கைகளை கூப்பி எழுப்பும் வேதனை வேண்டுகோள்களைக் பார்க்கும் எவரும், போரை கனவில் காணக்கூட விரும்ப மாட்டார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் கண்களால் பார்த்திருக்கிறோம்.

மோதல்களால் ஏற்படும் மனித துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், சர்வதேச சமூகம் பெரும்பாலும் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறது. மில்லியன் கணக்கான மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

எவ்வாறாயினும், இலங்கையின் 30 ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களை இன்னும் சுமந்து வரும் வடக்கு தமிழ் மக்களுக்கு தனது அரசாங்கத்தில் எந்தவொரு தீர்வையும் வழங்காமல் பலஸ்தீனம் தொடர்பில் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருப்பது தமிழர் தரப்பில் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

இதேவேளை, ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்து என்றாலும் கூட அதனை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழலுக்கு எதிரான போராட்டமானது உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.