''நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" : ஈரானின் பதிலால் கடும் கோபத்தில் ட்ரம்ப்


அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரான் நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஈரான் பதிலளித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ட்ரம்ப், ''அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது.

 
இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுதொடர்பாகப் கருத்து வெளியிட்டிருந்த  ட்ரம்ப், “நான் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்றால் நாம் ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அது அவர்களுக்கு பயங்கரமானதாக இருக்கும். அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த 2020இல் ஈரான் ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் ஈரான் எடுக்ககூடாது என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு ஈரான் அரசு தற்போது பதிலளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 
"அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூட மாட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

 
இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்க எடுக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணியை தடுக்க ட்ரம்ப் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. அதன்படி, ஈரானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை ட்ரம்ப் கையில் எடுக்கலாம் தகவல்கள் தெரிவிக்கின்றன..