கொழும்பில் 13 கடிதங்களை எழுதி விட்டு உயிரை மாய்த்த இளைஞன் - சோகத்தில் தாய், தந்தை

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இசுரு நெரஞ்சன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடனை அடைக்க முடியாத காரணத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழக்க நேரிட்டதாக உயிரிழந்த இளைஞனின் தாய் குறிப்பிட்டுள்ளார்.

இசுரு கடந்த 15ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தனது பெற்றோருடன் உரையாடிவிட்டு வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது, ​​இரவு உணவுக்கு வருமாறு தாய் இசுருவின் அறையை நோக்கிச் சென்ற போது, ​​கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார்.

மகன் தூங்கி விட்டதாக அம்மா நினைத்துள்ளார். மறுநாள் காலை தனது மகனின் அறைக்கு தேநீர் கொண்டு சென்றதாகவும், ஆனால் அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் தாய் பொலிஸாரிடம் கூறினார்.

பின்னர், இசுருவின் தந்தை அறையின் முன் ஒரு கதிரையை வைத்து, கதவில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது, ​​அவரது மகன் படுக்கையில் இல்லை. இது குறித்து பெற்றோர் அயலவர்களிடமும் தெரிவித்ததையடுத்து, அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, ​​அறையில் இசுரு தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

இசுருவின் அறையை பொலிஸார் சோதனையிட்ட போது, தாய், தந்தை உட்பட உறவினர்களுக்கு எழுதிய 13 கடிதங்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இசுருவின் இறப்பதற்கு முன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில், “அம்மா, இந்த உலகத்தில் நான் நேசித்த ஒரே நபர் நீங்கள் என்று சொன்னால் தவறில்லை என்று நம்புகிறேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்தவர்களில் மரணத்தின் முன்னால் விட்டு செல்ல முடியாத ஒருவராக நீங்கள் மாத்திரமே இருக்கின்றீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இசுரு தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் "அப்பா நீங்கள் இப்போது சோகமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் என்னை அதிகமாக நம்புனீர்கள்.முதலில் இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும். பிறப்பும் இறப்பும் இரண்டு வார்த்தைகள் என்றாலும் இரண்டின் விளைவும் ஒன்றுதான். அதாவது அவை இரண்டும் ஒன்றுதான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கடித அட்டைகளை அதன் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் ஒப்படைக்குமாறும் அவரது இறுதி உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனினும் இசுரு இரண்டு பேரிடம் 10 லட்சம் ரூபா கடனாக பெற்று பின்னர் 3 லட்சம் ரூபாவை திருப்பி செலுத்தியுள்ளார்.

பணத்தை கொடுத்தவர்கள் கொடுத்த தொகையை விட அதிக பணம் கேட்டதாகவும், கொடுக்க கடினமாக இருந்ததால் மகன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாயார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் இசுரு உயிரை மாய்க்க முயன்றதாக இசுருவின் தந்தை தெரிவித்துள்ளார்.