சிறுமியை ஆயுத முனையில் மிரட்டி, கட்டி வைத்து கொள்ளை - இளம் தம்பதி அதிரடியாக கைது



கம்பஹாவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து  சிறுமி ஒருவரின் கழுத்தில் ஆயுதத்தை வைத்து மிரட்டி, அவரை  கட்டி வைத்து கொள்ளையில்  ஈடுபட்ட இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

எண்டேரமுல்ல, பாதிலியாத்துடுய பகுதியில் நேற்று இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பல வீடுகளில் கொள்ளையிட்ட, களனி பகுதியில் வசிக்கும் திருமணமான இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 வயது ஆண், 20 வயது பெண் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த போது அவர்களின் மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து, மிரட்டி, கயிற்றால் கட்டிவிட்டு வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் திருட்டு இடம்பெற்ற சில மணித்தியாலங்களுக்குள் குறித்துக் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியிடம் கொள்ளையிடப்பட்ட  பல தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.