உலகின் மிகப் பழைமையான ‘குகை ஓவியம்’ கண்டுபிடிப்பு


உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 51,200 ஆண்டுகள் பழைமையாக இந்த ஓவியத்தில் காட்டுப் பன்றியைச் சூழ மூன்று மனிதர்கள் இருக்கும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. இது முந்தைய மிகப் பழைமையான குகை ஓவியத்தை விடவும் 5,000 ஆண்டுகள் பழைமையானதாகும்.

இது நவீன மனிதனின் படைப்பாற்றல் சிந்தனையின் காலத்தை மேலும் பின்னோக்கிச் செலுத்துவதாக உள்ளது. இதனை இந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு மனிதப் பரிணாமம் பற்றிய சிந்தனையை மாற்றக் கூடும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான அவுஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர் மக்சிம் அவுபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்தோனேசியாவில் குறைந்தது 45,500 ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்டதாக நம்பப்படும் காட்டுப் பன்றியின் ஓவியம் ஒன்றே உலகின் மிகப் பழைமையான குகை ஓவியமாக இருந்து வந்தது.