ரணில் உறுதியளித்த நல்லிணக்கம் தொடர்பான திட்டம் சாத்தியப்படுமா...! வெளியாகியுள்ள தகவல்


இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்த நல்லிணக்கம் தொடர்பான திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாமல் போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியன்று இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னர், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணப்பட வேண்டும் என ஜனாதிபதி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் 2040 வரைக்கும் அதற்காக காத்திருக்கவேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இனப்பிரச்சினையை தீர்க்காமல், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

இதனடிப்படையில் தற்போது அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தேசியக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.

இதன்கீழ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை தொடர் பேச்சுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனினும் பேச்சுவார்த்தைக்கு முன்னர், படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பின் நிபந்தனைகளை ரணிலால் இன்னும் செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் வாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லும்போது படையினருடன் பேசி இதற்கு தீர்வை அறிவிப்பதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டுள்ள நிலையில் ஏனைய பிரச்சினைகளுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை பெப்ரவரி 4ம் திகதிக்குள் முன்வைக்கமுடியாத நிலை ஏற்படும் என்று தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.