முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின், தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று கேட்டபோது, கலாநிதி ராஜபக்ச அந்த யோசனையை முற்றாக நிராகரித்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்பட்ட கதையின் ஒரு பகுதியாக இருக்க தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இவர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவர் நீதியமைச்சராக இருந்தபோது சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவருமில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.