வாகனங்களை நாய்கள் துரத்துவது ஏன் - பின்னாலுள்ள சுவாரஸ்ய தகவல்


வாகனங்களை கூட்டமாகவோ அல்லது தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.

நாய்கள் துரத்துவதால், ஏராளமான வாகன சாரதிகள் வீதி விபத்துக்களில் சிக்கியும் வருகின்றனர். இவ்வாறு நாய்கள் வாகனங்களை திடீரென துரத்த என்ன காரணம்.அது தொடர்பாக தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிற்கு புதிதாக ஒரு நபர் வருகிறார் என்றால், அவரை பார்த்து நாய்கள் குரைக்கும். அதற்கு என்ன காரணமோ, அதே காரணத்திற்காகதான் வாகனங்களையும் நாய்கள் குரைத்து கொண்டே துரத்துகின்றன. அதாவது வீட்டிற்கு வரும் புதிய நபர்களை நாய்கள் அந்நியர்களாக கருதும். அவர்களை நாய்கள் நம்பாது.

அதேபோன்று தங்கள் வாழ்விடத்திற்குள் வரும் அறிமுகம் இல்லாத புதிய வாகனங்களையும் குரைத்து கொண்டே துரத்துவதை நாய்கள் வழக்கமாக வைத்துள்ளன. தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் வாகனங்கள் மீது நாய்கள் சிறுநீர் கழிக்கும். இதன் மூலம் தங்கள் வசிப்பிடத்திற்கு சொந்தமில்லாத வாகனங்கள் தங்களை நெருங்கும்போது, அவை மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும். சிறுநீர் வாசனையின் மூலம், அவை தங்கள் வசிப்பிடத்திற்கு சொந்தமில்லாத வாகனங்கள் என்பதை உணர்ந்து கொள்கின்றன.

எனவே அந்த வாகனங்களை அச்சுறுத்தலாக கருதி, நாய்கள் குரைத்து கொண்டே துரத்துகின்றன. வீட்டிற்கு வரும் புதிய மனிதர்களை அச்சுறுத்தலாக கருதுவதால்தான் நாய்கள் குரைக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதற்கு இது ஒரு காரணம் மட்டும்தான். இதேபோன்று இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

சில சமயங்களில் 'டைம் பாஸ்' செய்வதற்காகவும் கூட வாகனங்களை, நாய்கள் துரத்துகின்றன. நாய்கள் தனிமையை உணர்ந்தாலோ அல்லது 'போர்' அடிப்பது போன்ற உணர்வு அவைகளுக்கு ஏற்பட்டாலோ வாகனங்களை துரத்தி 'டைம் பாஸ்' செய்து கொள்ளும். இதன் மூலம் சலிப்பு நீங்கி, நாய்கள் மகிழ்ச்சியாக காணப்படும்.

அதிகமான சத்தத்தை நாய்கள் விரும்பாது என்பது, அவை வாகனங்களை துரத்துவதற்கான மற்றொரு காரணம். வாகனங்கள் அதிகமான சத்தத்துடன் இயங்கும்போது, நாய்கள் அச்சமடையும். இந்த அச்ச உணர்வு, வாகனங்களை துரத்துவதற்கு நாய்களை தூண்டுகின்றன. சாதாரண மனிதர்களால் கேட்க முடியாத சத்தத்தை கூட, நாய்களால் மிகவும் துல்லியமாக கேட்க முடியும். அந்த அளவிற்கு அவை உணர்திறன் மிக்கவை. எனவே வாகனங்களின் மூலமாக வழக்கத்திற்கு மாறான சத்தத்தை கேட்கும்போது, நாய்கள் குரைத்து கொண்டே துரத்த தொடங்கி விடுகின்றன.

அத்துடன் சில சமயங்களில் வாகனங்களின் டயர்கள் சுற்றுவதும் கூட நாய்கள் துரத்த காரணமாக அமைகிறது. வாகனங்களின் டயர்கள் வேகமாக சுற்றும்போது, நாய்கள் கவரப்படுகின்றன. அப்படிப்பட்ட காட்சியை காணும் சமயங்களில் எல்லாம், அதனை விளையாடுவதற்கான நேரமாக நாய்கள் கருதி கொள்கின்றன. அப்போது வாகனங்களை துரத்துவது என்பது, நாய்களை பொறுத்தவரையில் பந்துகள் அல்லது பொம்மைகளுடன் விளையாடுவதை போன்றது.

ஆனால் , நாய்கள் வாகனங்களை துரத்துவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதன் காரணமாக வாகன சாரதிகள் வீதி விபத்துக்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எனவே நாய்களிடம், குறிப்பாக இரவு நேரங்களில் நாய்களிடம் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.