தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கருத்துக்கணிப்பில் விஜய்க்கு கிடைத்துள்ள இடம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அடுத்ததாக யார் முதலமைச்சராக வருவார் என்ற கணிப்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர்(TVK) விஜய்க்கு(Vijay) 2ஆவது இடம் கிடைத்துள்ளது.

தேர்தல் மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பாக நாடு முழுவதும் கருத்து கணிப்புகளை நடத்தும் சி.வோட்டர் நிறுவனம் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

இந்த தேர்தல் கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் முதலமைச்சராக யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 27 சதவீதம் பேர் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீத ஆதரவும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.

தமிழக அரசின் செயல்பாடு

தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 15 சதவீதம் பேர் மிக மிக திருப்தியாக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன் 36 சதவீதம் பேர் திருப்தி என்று கருத்து கூறியுள்ளனர்.

25 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி இல்லை என்று கூறியுள்ளனர். 24 சதவீதம் பேர் பதில் சொல்ல இயலாது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

தி.மு.க. அரசு

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளது என்ற கேள்விக்கு 22 சதவீதம் பேர் அவர் மிக மிக அற்புதமாக செயல்படுவதாக மிகுந்த திருப்தி தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தி இருப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்கு அமைந்து இருப்பதாகவும் தமிழக மக்களின் கருத்துக்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதுபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு அதிக பேரால் ஆதரவு பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அது போல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் வளர்ச்சியும் இந்த கருத்து கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.