திருமணமான பெண்ணுடன் வட்ஸ்அப் மூலம் தொடர்பு :இளைஞனின் உயிர்பறிபோனது

வட்ஸ்அப் மூலம் 44 வயதுடைய பெண்ணுடன் குறுஞ்செய்தி பரிமாறியதற்காக கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஐந்து மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக சபுகஸ்கந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஏப்ரல் 19 ஆம் திகதி ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களால் தாக்கப்பட்ட இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞனுடன் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக செய்திகளை பரிமாறிக்கொண்ட பெண், அவரது தாய், கணவர் மற்றும் இருவர் தப்பிச் சென்று அவர்கள் வாழும் கிராமங்களில் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹகுரன்கெத்த பம்பரகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்துனில் சாமர காரியப்பெரும (21) என்ற இளைஞரே எனவும் அவர் கொரிய மொழிப் பாடத்தில் கல்வி கற்று வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

வாட்ஸ்அப் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக அடையாளம் காணப்பட்ட பெண்ணுடன் குறித்த இளைஞன் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டதாகவும் குறித்த பெண் 44 வயதுடைய திருமணமானவர் என்பது இளைஞனுக்கு தெரியாது எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.