முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று நடந்துள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் ஏதேனும் சூழ்ச்சி திட்டமிடப்பட்டதா? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்திலிருந்த பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையத்தில் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டவர்கள் தொடர்பில் பார்த்தால் அது பிரச்சினைக்குரியதாகவுள்ளது.
குறித்த கூட்டத்தில் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த சூளாகொடிதுவக்கு, கொழும்பு குற்றவியல் பிரிவிலிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நெவில் ஆகியோர் கலந்து கொண்டதாகவும்,
இந்த கூட்டத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் வருகைத் தராமையால் அவரின் சகா இனியபாரதியை அனுப்பியுள்ளார்.
மேலும் ஹில்டன் ஹோட்டலில் இருந்த இனியபாரதியின் வாகனத்தைச் சுதா என்பவர் செலுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தின் போது என்ன சூழ்ச்சி செய்யப்பட்டது என்று தெரியவில்லை, இது தொடர்பில் உங்களுக்கு எதுவும் தெரியுமா? .
இனியபாரதி என்பவர் கடந்த காலங்களில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் எனவும் பிள்ளையான் தொடர்பிலும் பல தகவல்கள் அவரிடம் உள்ளதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறும் அரசாங்கம், கணேமுல்லை சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண்ணை இன்னும் தேடுவதாகச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் முன்னாள் பொலிஸ்மா அதிபரையும் தேட முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது, அத்துடன் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதால் இந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.