கொழும்பில் அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை- தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குருதுவத்தை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை (29) இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்கப் பெண்ணான குறித்த அதிகாரி குருதுவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமை மாலை அருகில் உள்ள இடத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் அவரது கைப்பையை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைப்பையில் இருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அவரது மொபைல் போன் மற்றும் கிரெடிட் கார்டு மட்டுமே. தனது கைப்பை திருடப்பட்டதையடுத்து, பயந்து வீட்டிற்கு ஓடிய அவர், இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு அறிவித்துள்ளார்.

அந்த அறிவித்தலையடுத்து, காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில், குருதுவத்தை காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவுடன் காவல்துறை மா அதிபர்கள் பலர் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பையை திருடிவிட்டு இருவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளை தற்போது காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.