ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட தனிநபர்களிடமிருந்து ஒரு கோடியே 4 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் வங்கி கணக்கில் 100 க்கும் அதிகமான தடவைகள் பணம் வைப்பிலிடப்பட்டமை தெரிய வந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேற்று காலை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சதீஷ் கமகேவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண நேற்று உத்தரவிட்டார்.
மேலும், மற்றொரு நபரின் பெயரில் மூன்று கணக்குகளைத் திறந்து, பொலிஸ் சேவைகளைப் பெற வந்த பாதாள உலக குழு அமைப்பினர் உள்ளிட்ட குற்றவாளிகளிடமிருந்து, அந்தக் கணக்குகளில் ஒரு கோடியே 4 இலடசத்துக்கும் அதிகமான பணம் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
சந்தேகத்திற்குரிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தன்னிடமிருந்து சேவைகளைப் பெற வந்தவர்களிடமிருந்தும், பாதாள உலக குழு நபர்களிடமிருந்தும் மற்றும் பிற குற்றவாளிகளிடமிருந்தும் இந்தப் பணத்தைப் பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த சந்தேக நபர் சட்டவிரோத உடற்பிடிப்பு நிலையதிலிருந்து பணம் பெற்று மூன்று வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தது.
இதன்பின்னர், சந்தேகநபரின் மனைவி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்த சந்தேகநபரின் பாதுகாப்பு அதிகாரி, கேள்விக்குரிய இந்த மூன்று வங்கிக் கணக்குகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பணத்தை வைப்பு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவரது ஓட்டுநர், 50 முறை, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் 10.4 மில்லியனுக்கும் அதிகமான ரூபாயை வைப்பு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள அமில பரணவிதான என்ற போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்தும் இந்தக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல வங்கிக் கணக்குகள் ஆராயப்பட வேண்டும் என நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.